top of page

சுயநினைவு கொண்ட எந்த ஒரு தமிழனாலும் மறக்க முடியுமா?கருப்பு ஜூலையை...

Writer: CANADA THAMILAALICANADA THAMILAALI


வ.கௌதமன்


தமிழீழ மண்ணில் சிங்கள அதிகார வர்க்கம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைகளில் மறக்கமுடியாதது கருப்பு ஜூலை. அதனை நேரில் கண்டிருந்தால் பேய் பிசாசுக்கும் கூட பித்தம் பிடித்து சித்தம் கலங்கி இருக்கும். ஜூலை 23, 1983 தொடங்கி இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்டுச் சிங்கள இனவாதிகள் எம் தமிழர்களை அழித்தும் சொத்துகளைச் சிதைத்தும் சூறையாடியும், சுமார் மூவாயிரம் பேர் வரை பச்சை படுகொலை செய்தனர்.


வெலிக்கடை சிறையதிகாரிகள் சிங்கள இன வெறிக்கொண்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். சரியான

தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களை நோக்கி ஓடினர். சிறைக்கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்தே வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் கையிலேந்திய கத்தி, பொல்லு, வாள், கோடரி, இரும்புக் கம்பி, குத்தூசி, விறகுக் கட்டைகள் என தமிழ் இளைஞர்களின் உடல்களைக் கிளறி கிழித்தெறிந்தன.

தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன.

சிங்களச் சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்களச் சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள்.


குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைக்கப்பெற்ற சூழலில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதே காரணத்திற்காக மட்டும் குட்டிமணி, தங்கதுரை இருவரையும் குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார்கள். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து குட்டிமணி தங்கதுரை இருவரின் கண்களையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.

இக்குரூர நிகழ்வை கண்டு சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர்.பின்பு கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்களை ரத்த சகதியோடு கொண்டுவந்து சிறைச்சாலையில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலைக்கு முன்பு குவித்தார்கள். ஏற்கனவே நிர்வாணமாக்கப்பட்டு கிடந்த உடல்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தை அள்ளி அள்ளி தங்களின் உடலில் பூசிக் கொண்டு மீதமுள்ள ரத்தத்தை புத்தரின் மீது தெளித்து "உம்மையும் உம் மதத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை உமக்கு பலியிட்டு இருக்கிறோம்" என்று கத்தி ஆனந்த கூத்தாடினார்கள். ஹிட்லர் கூட்டம் கூட செய்ய தயங்கியதை சிங்களக் கூட்டம் செய்து முடித்த ரத்தம் உறையும் இந்தச் சாகசத்தை இன்றும் அவர்கள் நிறுத்திய பாடில்லை. மனிதனாக பிறந்தவர்கள் அதிலும் தமிழனாக பிறந்தவர்கள் சுயநினைவை இழக்கும் வரை இந்தக் குரூரங்களை ஒரு போதும் மறக்க முடியாது.


ஒவ்வொரு ஆண்டும் குட்டிமணி, ஜெகன் மற்றும் ஜூலை கலவரத்தில் கொல்லப்பட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கும் கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக வீரவணக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.


நினைவஞ்சலி நிகழ்வு நடத்தி வீரவணக்கம் செலுத்துவது மட்டுமல்ல நமது வேலை, எந்தக் காரணத்தைத் கொண்டு அவர்கள் சிதைத்து, சின்னாபின்னமாக்கப் பட்டார்களோ அதற்கான தீர்வை நாம் உறுதியாக வென்றாக வேண்டும். நமது தமிழீழ மண்ணை நாம் மீண்டும் கைவசப்படுத்த வேண்டும். வெகு விரைவில் நம் தமிழீழ நாட்டை சுதந்திரம் பெற்ற நாடாக தலைநிமிர செய்வது மட்டுமே நாம் அவர்களுக்குச் செய்கிற உண்மையான மரியாதையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

 
 
 

Recent Posts

See All

தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை பிப்ரவரி 01-ம் தேதி, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும்...

Comments


தரணியெங்கும் தமிழ்வளர்க்கும்

உங்கள்

கனடா தமிழாழி

தமிழாழியுடன்
இணையுங்கள்
பேரவையில்
பணியாற்றுங்கள்

bottom of page